Monday, May 23, 2022
HomeTamil Newsதமிழ்நாட்டில் குழந்தைகளை விற்கும் தாய்கள் - தேவைப்படும் முன்னெடுப்புகள்

தமிழ்நாட்டில் குழந்தைகளை விற்கும் தாய்கள் – தேவைப்படும் முன்னெடுப்புகள்

யாஸ்மின்

யாஸ்மின் சென்னை புழலுக்கு அருகே காவாங்கரையை சேர்ந்தவர். திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. யாஸ்மின் இரண்டாவதாக கர்ப்பமடைய, அவருடைய கணவர் விட்டுப்பிரிந்துள்ளார். குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன நிலையில், ஆட்டோவில் வந்தபோது தன்னுடைய பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் யாஸ்மின்.

விசாரணையில் பணம் கொள்ளையடிக்கப்படவில்லை என்பதும், இரண்டாவதாக பிறந்த குழந்தையை விற்று யாஸ்மின் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது.தனக்குக் கிடைத்த பணத்தில் வீட்டு வாடகை பாக்கியை செலுத்தியுள்ளார். குழந்தை கிடைக்க வேண்டும் என புகார் அளித்தது தெரியவந்தது. இதன் மூலம் குழந்தைகள் விற்பனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஜெயகீதா உதவி

கருத்தரித்தலுக்காக ஆரோக்கியமான கருமுட்டைகளை பெற்று சந்தைப்படுத்தும் ‘இடைத்தரகராக’ செயல்படுவர் ஜெயகீதா. கருவைக் கலைக்க முடிவுசெய்த யாஸ்மினுக்கு, குழந்தையை பெற்று பின்னர் விற்று விடலாம் என யோசனை அளித்துள்ளார் ஜெயகீதா.

ஜெயகீதாவின் ஏற்பாட்டில் இருமுறை தன்னுடைய கருமுட்டைகளை தானம் செய்துள்ளார். இந்த முன் அறிமுகத்தால் யாஸ்மின் நவம்பர் 21-ம் தேதி அவருக்குப் பிறந்த ஆண் குழந்தையை நவம்பர் 25-ம் தேதி ஜெயகீதா மூலம் ரூ.3.5 லட்சத்துக்கு விற்றுள்ளார். அந்த பணம் திருடப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

காவல் ஆய்வாளர் கூற்று

யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் கண்ணன் பிபி தமிழிடம் கூறுகையில், கணவர் பிரிந்து சென்றதால் இன்னொரு குழந்தையை வளர்ப்பதற்கு வழியில்லை என்பதை புகாரிலேயே அவர் ஒப்புக்கொண்டார். கருவைக் கலைக்க மருத்துவமனையில் ஒப்புக்கொள்ளவில்லை. ஜெயகீதா யோசனையின்படி குழந்தையை விற்றுள்ளார் யாஸ்மின். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரும்பாக்கம் சுரபி இல்லத்தில் குழந்தை ஒப்படைக்க பட்டுள்ளது. யாஸ்மினுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு திட்டங்கள்

அரசு திட்டம் பெறுவதற்கு அவர்கள் ஒற்றை பெற்றோர் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டும். காதல் திருமணமாக இருந்தால் எந்த ஆவணங்களும் இருக்காது. நிதியுதவித் திட்டம் பெறுவதில் ஊழல்களும் உள்ளன.

மையங்கள்

குழந்தையை தனியே விட்டு வேலைக்கு செல்ல முடிவதில்லை. குடும்ப வன்முறை உள்ளிட்ட பிரச்னைகள் மூலமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தங்க வசதி ஏற்படுத்திக்கொடுப்பது, உணவு, குடிநீர், படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ போன்ற மையங்கள் குறித்த தகவல்கள் கூட பலருக்கும் தெரிவதில்லை.

தவறான இலக்குகள்

சமூக ரீதியாக நலிவடைந்த தாய்மார்கள் தவறான இலக்குகளுக்கு ஆளாகுகின்றனர். குறிப்பாக அமைப்புசாரா பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்பதால் குழந்தையை விற்பது போன்ற தவறான இலக்குகளுக்கு ஆளாகின்றனர். கல்வியறிவுள்ள ஒற்றைத்தாய் கூட இதனை சமாளித்துவிடுவார்கள். அதுகுறித்த கல்வியறிவு இல்லாதவர்கள் சிக்கிவிடுகின்றனர்.

சட்டபூர்வ வழிமுறைகள்

குழந்தையை தத்தெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு சாதாரண மக்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் தேவநேயன் கூறுகிறார்.

தேவநேயன் பிபிசி தமிழிடம் பேசியது

தனக்கு ஒரு குழந்தை வேண்டாம் என்றால் அந்த குழந்தையை முறையாக தத்துக் கொடுப்பது எப்படி என்ற புரிதல் இல்லாததுதான் குற்றங்கள் நடப்பதற்கான காரணம். தொட்டில் குழந்தைத் திட்டம் , நலிவடைந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான அரசின் திட்டங்கள், அரவணைப்புப் பெற்றோர் குறித்து தெரிவதில்லை. குழந்தைகள் நல ஆணையம் பற்றி சாதாரண மக்களுக்குத் தெரியாது. சாமானிய மக்களுக்கு தத்தெடுப்பது குறித்த விரிவான பிரசாரம் செய்யப்படவில்லை. சட்டப்பூர்வமாக தத்தெடுப்பது எளிமைப்படுத்தப்படவில்லை.”

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டனர். 100 ரூபாய் பத்திரத்தில் சாட்சிக் கையெழுத்திட்ட வழக்கறிஞர்களும் சிக்கி உள்ளனர். பெண் குழந்தை , கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரை மூளைச்சலவை செய்வதற்கான கும்பல் இருக்கிறது. படித்தவர்களே குழந்தைகளை தவறான முறையில் தத்தெடுக்கின்றனர்.

தண்டனை

பணத்துக்காக குழந்தையை விற்பதோ, வாங்குவதோ தண்டனைக்குரிய குற்றம். சிறார் நீதி சட்டம் படி சட்டத்துக்குப் புறம்பாக குழந்தையை தத்தெடுப்பது தண்டனைக்குரியது. அதில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் அபராதம் தண்டனையாக கிடைக்கும்.

சரண்யா ஜெயக்குமார் விளக்கம்

குழந்தையை வளர்க்க இயலாதவர்கள் பாதுகாப்பு அலகில் ஒப்படைக்க வேண்டும். பெரும்பாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும். குழந்தை விற்பனை சம்பவங்கள் நடைபெற்ற உடனே அதிகாரிகள் குழந்தையை மீட்பார்கள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக அலகுகள் செயல்படுகின்றன. குழந்தைகள் தொடர்பான உதவிகளுக்கு 1098 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். குழந்தையை ஒப்படைக்க மனமில்லாமல் பொருளாதார நலிவடைந்த பெற்றோர், மாவட்ட அலகுக்கு தெரிவித்தால் அரசுசாரா நிறுவனங்கள் மூலம் உதவி பெற்றுக் கொடுப்பார்கள்.நேரடியாக அரசு நிதியுதவி வழங்கும் வகையிலான திட்டம் இல்லை என்றார் சரண்யா ஜெயக்குமார்.

சட்டங்கள்

உலகம் முழுவதும் தத்தெடுப்புகள் அதிகரித்து வருகின்றன. புகழ்பெற்ற பிரபலங்களே தத்தெடுப்பு மூலம் தங்களை பெற்றோர்களாக்கி கொள்ளும் அறிவிப்புகள் பலரது கவனத்தை ஈர்க்கின்றன. ஆனால் சாமானியர்களுக்கு அதுகுறித்த அறிதல் குறைவாகவே உள்ளது.
ஒற்றை பெண் எந்த பாலின குழந்தைகளையும் தத்தெடுக்க முடியும், ஆண்கள் தத்தெடுக்க விரும்பினால் ஆண் குழந்தை மட்டுமே கிடைக்கும்.

தத்தெடுக்க வயது

தத்தெடுக்க விரும்புவோர் அதிகமாக இருக்கின்றனர் குழந்தைகள் குறைவாகவே உள்ளது. தத்தெடுக்க திருமணமாகி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்திருக்க வேண்டும். 4 வயதுக்கு கீழ் உள்ள குழந்தையை தத்தெடுக்க விரும்பினால் கணவன் – மனைவி வயது மொத்தம் 90-ஐ தாண்டக்கூடாது.4-8 வயதுள்ள குழந்தையைத் தத்தெடுக்க விரும்பினால் 100-ஐ தாண்டக்கூடாது. 8-18 வயதுள்ள குழந்தை தத்தெடுக்க 110-ஐ தாண்டக்கூடாது. தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தால் குழந்தையை தத்தெடுக்க முடியாது. 3 குழந்தைகளும் சிறப்பு குழந்தைகளாக இருந்தால் தத்தெடுக்க முடியும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இது நடைபெறுவதாக சரண்யா ஜெயக்குமார் விளக்கினார்.

நிதிஉதவி

குழந்தையை மூன்று ஆண்டுகள் வளர்த்தபின்னர் பெற்றோர் புகார் அளித்தால் மீண்டும் குழந்தையை வளர்க்க முடியாது. வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விடப்படும் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் என அழைக்கப்படுவர். அக்குழந்தைகள் தத்தெடுப்பு இல்லத்தில் வளர்க்கப்படுவர். அக்குழந்தையின் புகைப்படத்தை தத்தெடுப்பதற்காக வெளியிடுவர். பின்னர் காரா மூலமாக, யார் தத்தெடுக்க விரும்புகிறார்களோ, அப்பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும். ஒப்படைக்கப்படும் குழந்தைகளில், குழந்தையின் உறவினர்கள் யாராவது வந்து நாங்கள் தத்தெடுக்க விரும்பவில்லை ஆனால், குழந்தையை வளர்க்கவும் பராமரிக்கவும் விரும்புகிறோம் என கூறினால், அரசு அந்த குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி வழங்குகிறது.

இணையதளம்

cara.nic.in இணையதளத்தில் பதிவு செய்துதான் குழந்தையை தத்தெடுக்க முடியும். அதிகாரிகள் இல்லத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்வர். இவர்களுக்குக் குழந்தை இருக்கிறதா அவர்கள் எந்த பாலின குழந்தையை கேட்கிறார்கள் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கிறார்களா, குற்றப்பின்னணி இருக்கிறதா என எல்லா காரணிகளையும் ஆய்வு செய்து அவர்கள் குழந்தையை வளர்க்க தகுதியானவர்கள் என சான்று அளிப்பார்கள். பின்னர் அவர்களுக்கு 3 குழந்தைகள் பார்க்க அனுமதியளிப்பார்கள்.

நீதிமன்றம்

குழந்தையை தேர்ந்தெடுத்து நீதிமன்றம் வாயிலாகத்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். தத்தெடுத்த குழந்தைகளை நீதிமன்றம் கண்காணிக்கும். ஒரு குடும்பத்தில் உள்ள குழந்தையை மற்றொரு குடும்பம் தத்தெடுக்க விரும்பினால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு சென்று ‘ஹாமா’ மூலமாக குழந்தையை தத்தெடுக்க விரும்புகிறோம் என நடைமுறைகளை பின்பற்றி குழந்தையை தத்தெடுக்க வேண்டும்.

தேவையான முன்னெடுப்புகள்

செயற்கை கருவூட்டல்

குழந்தை இல்லையென்றால் திருமணமான முதல் வருடம் கூட விட்டுவிடுவார்கள். சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் நடக்கிறது. தனியார் மையங்களே அதிகம் உள்ளன. செயற்கை கருவூட்டலுக்கு வங்கிக்கடன் அளிப்பதெல்லாம் உள்ளது.

100 நாள் வேலை திட்டம்

கிராமப்புற பெண்கள் என்றால் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம், ஒற்றைத் தாய்மார்களுக்கு வேலை கிடைப்பதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். நகர்ப்புறங்களில் வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகள் உள்ளன.

ஒன் ஸ்டாப் சென்டர்

ஒற்றைத்தாய்மார்கள் தங்கள் சுயாதினத்தை இழந்துவிடாமல் வாழ்வதற்கான நம்பிக்கையை அதிரிக்க ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ குறித்த முறையான விழிப்புணர்வை பராமரிக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு

2012 ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின்கீழ் கிராம குழந்தைகள் பாதுகாப்பு குழு உருவாக்க அரசாணை வெளியிட்டு நிதி ஒதுக்கினர். பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளடக்கிய இக்குழு ஆண்டுக்கு 3 முறை அந்த ஊரில் குழந்தைகளின் நிலை குறித்து ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை அறிய இது உதவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments