தாக்குதல்
ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இதில் ராஜீவ்காந்தியுடன் 18 பேர் இறந்தனர். இந்த வழக்கில் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 9 வோல்ட் பேட்டரியை பேரறிவாளன் வாங்கி கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

விடுதலை
பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். 161 ஆவது சட்டப்பிரிவின் கீழ் முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் காரணமாக தனக்குரிய அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பயன்படுத்துகிறது. 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

ஏடிஎஸ்பி அனுசுயா
பேரறிவாளன் விடுதலை குறித்து பேசிய அனுசுயா இது மிகவும் அநீதியானது என்று கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்து இந்தியாவின் முன்னாள் பிரதமரை கொன்றுள்ளனர் என்றும், அவர்களோடு சேர்ந்து 16 பேர் கொல்லப்பட்டனர் என்றும் கூறினார். இந்த வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்தபோது உற்சாகம் அடைந்தோம். இந்த வழக்கில் உள்ள சட்ட நுணுக்கங்களை வெளிக்காட்டி பேரறிவாளன் தரப்பில் வாதாடி விடுதலை பெற்றார். இவர்கள் செய்த தவறுக்காக நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

காங்கிரஸ் பிரமுகர் சம்தானி மகன்
பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நிரபராதியாக வெளியில் வந்தால் ஏற்று கொண்டிருப்போம் என கூறியுள்ளார். ஆளுநர் தாமதம் செய்ததை காரணமாக வைத்து வெளியில் வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார். இந்த படுகொலை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட எங்களிடம் இவர்கள் எந்த கருத்தையும் கேட்கவில்லை என கூறியுள்ளார்.

தள்ளுபடி
இந்த வழக்கில் எங்கள் தரப்பை கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க கூடாது என கேட்டுக்கொண்ட மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டனர். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான விவகாரமாக மட்டும் இந்த வழக்கை எடுத்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது நாங்கள் தான் என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தமிழர்கள்
பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்ததை பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள், முதலமைச்சரும் கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார். எங்களுக்கும் ஸ்டாலின்தானே முதலமைச்சர் நாங்கள் தமிழர்கள் இல்லையா? என கேட்கிறார்.