கவனம்
இரத்தம், ரணம், ரௌத்திரம் படத்தின் மீதுதான் தற்போது இந்திய திரையுலகின் ஒட்டுமொத்த கவனமும் குவிந்திருக்கிறது. முதல் நாளிலேயே ரூபாய் 220 கோடிக்கும் அதிகமான வசூல் என்ற இமாலய எண்ணிக்கையுடன் தொடங்கியிருக்கும் இந்த படத்தின் கட்டுரை எழுதும் போது சுமார் 500 கோடியை தொட்டிருக்கிறது.

எஸ்எஸ் ராஜமெளலி
இந்த படத்தில் வரும் பல காட்சிகள் பெரிய திரையில் நம்மை சிலிர்க்க வைக்கின்றன. இந்த ஓடிடி யுகத்தில் மக்களை திரையரங்குகளுக்கு வரவைக்க பலர் முயன்றுவருகிறார்கள். அதில் முதன்மையானவராக இயக்குனர் எஸ்எஸ்.ராஜமெளலி உள்ளார். அதிக வெற்றி சதவிகிதத்தை வைத்திருக்கும் பிரமாண்ட இயக்குனர் ஆவார்.

கதை
ஆர்ஆர்ஆர் என்ற படத்தின் கதை 1920 களில் வெள்ளையர்களை எதிர்த்து நின்ற அல்லூரி சீதாராம ராஜு, கொமாரம் பீம் ஆகிய இருவரின் பெயர்களையும், பின்னணியையும் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. போராட்டங்களின் சாராம்சத்தை எடுத்துக்கொண்டு இருவரையும் நண்பர்களாக்கி ஒரு வரலாற்று புனைவு கதையை உருவாக்கியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.

முன்னணி நடிகர்கள்
அல்லூரி சீதாராம ராஜுவாக ராம்சரண், கொமாரம் பீமாக ஜூனியர் என்டிஆர் என தெலுங்கின் இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். ஆக்சன் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடனம் என எல்லாமுமே பிரித்து கொடுக்கப்பட்டிருக்கின்றன.

சாதனை
காலங்காலமாக மக்கள் படங்களை பார்ப்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே என்பதை ஓரமாக வைத்துவிட்டு யோசிக்கும் இயக்குநர்கள்தான் மக்களை அதிகம் திருப்திப்படுத்துகிறார்கள்.ராஜமெளலி திரைப்படத்தை திரையரங்குகளில் பார்ப்பது என்பதை ஓர் அனுபவமாக பார்க்கிறார். இதன் காரணமாக அவரது படங்கள் சாதனைகளை படைக்கின்றன.

விளம்பர நிகழ்வு
வாரத்துக்கு நான்கு படங்கள் வெளியாகும் சூழலில் ஒரு படத்துக்கு ப்ரோமோஷன் என்பது முக்கியம் என்பதை உணர்ந்துள்ளது ஆர்ஆர்ஆர் குழு. படம் பலமுறை தள்ளிப்போனாலும் அத்தனை முறையும் சலிக்காமல் விளம்பர நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்தியிருக்கிறார்கள்.

குறைகள் இல்லை
வெளிப்படையாக குறிப்பிட்ட மதத்தினரை இழிவுபடுத்தி பேசும் மத்திய அரசின் ஆதரவு பெற்ற படங்களுக்கு மத்தியில் ஆர்ஆர்ஆர் படத்தை பார்க்கும்போது குறையொன்றும் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது.