நுண்ணுயிர்கள்
மக்கள் அனைவரும் மண்ணுக்கு உயிர் இல்லை என்று நினைக்கிறார்கள். ஒரு கைப்பிடி மண்ணில் 500 கோடி முதல் 700 கோடி வரையிலான நுண்ணுயிர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நாம், நம்மை சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் உயிருடன் இருப்பதற்கு அந்த நுண்ணுயிரிகள் தான் காரணமாக உள்ளது. உலகில் உள்ள 87 சதவீதம் உயிரினங்களை மண் தான் வாழ வைக்கிறது.

ஆய்வுகள்
உலகில் தற்போது இருக்கும் மண் வளத்தை வைத்து 80-100 அறுவடை மட்டுமே நம்மால் செய்ய முடியும். இதனை வைத்து பார்க்கும் போது 45 வருடம் முதல் 60 வருடம் மட்டுமே நம்மால் விவசாயம் செய்ய முடியும். 2045ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 900 கோடியை தாண்டும். உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நாவின் ஆய்வுகள் கூறுகிறது.

உணவு பற்றாக்குறை
இதன் காரணமாக உலகளவில் உணவு பற்றாக்குறை உருவாகி மக்கள் பசியாலும், பட்டினியாலும் கொத்து கொத்தாக இறக்க நேரிடும். இது ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகளும் ஆய்வுகள் மூலம் கண்டறிந்த உண்மைகள் ஆகும்.

சட்டம் இல்லை
நாட்டில் விலங்குகளுக்கு சரணாலயங்கள் உருவாக்கி அதனை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர். நாட்டில் பசுமை பரப்பை பேணுவதற்கும். காடுகள் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும் சிறப்பு சட்டங்கள் உள்ளன. மண் அழிவினை தடுப்பதற்கோ, மண்ணில்’ உள்ள உயிர்களை பாதுகாக்கவோ சட்டங்கள் எதுவும் இல்லை.

மணலாக மாறும் நிலங்கள்
மண் என அழைப்பதற்கு அதில் குறைந்தபட்சம் 3 சதவீத கரிம சத்துக்கள் இருக்க வேண்டும். தமிழக மண்ணில் கரிம சத்தின் அளவு சராசரியாக 0.68 மட்டுமே உள்ளது. இந்த அளவுகளை பார்க்கும் போது மண் மணலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூல காரணம்
உலகில் மிக முக்கியமான சுற்றுசூழல் பிரச்சனைகளாக பேசப்படும் பருவநிலை மாற்றம், தண்ணீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் மூல காரணம் மண் வளத்தை பாதுகாக்காமல் இருப்பது தான். மண்வள பிரச்சனையை சரிசெய்வதன் மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை காண முடியும்.